புதன், 14 செப்டம்பர், 2016

சிறுவர் சிறுகதை: ஓரம் போ

                   பரப்பரப்பான நகரத்தின் சாலை அது. வாகனங்கள் அங்கும் இங்குமாக அலைமோதிக் கொண்டிருந்தன. ‘பீங்! பீங்!’ என வாகனங்கள் எழுப்பிய சத்தங்கள் காதைத் துளைத்தன. சாலையோரங்களில் நின்று கொண்டிருந்தவர்கள் சாலையைக் கடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர். “சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என வேகமாக அந்த வாகன நெரிசலை உடைத்துக் கொண்டு முகிலனின் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. சாலையின் ஓரமாக முகிலன் சைக்கிளை வேகமாகச் செலுத்திக்கொண்டிருந்தான்.
                      அவனுக்கு முன்னால் சைக்கிளின் பிடியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் குமரன் நடுங்கியே போய்விட்டான். “வேகமா போவதே! பயமா இருக்கு..” எனக் கத்தினான் குமரன். முகிலன் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவன் சைக்கிளைப் பலம் கொண்டு மிதிப்பதிலேயே கவனமாக இருந்தான். உணவகத்தில் அமர்ந்திருந்தவர்களில் சிலர் முகிலனைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தனர்.  “ஸ்கூல் உடுப்பைப் போட்டுக்கிட்டு... பாருங்க... என்னா பண்றானுங்க நம்ப பையனுங்க” என ஒருவர் ஆதங்கத்தோடு கூறினார்.                               முகிலன் காதில் எதுவுமே விழவில்லை. சைக்கிளின் மிதியை மேலும் வேகமாக மிதித்தான். குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்குப் போய் சேர்ந்தாக வேண்டும் என மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தான். மதிய வெயில் தலையைச் சுட்டது. ஒரு முற்சந்தியை நெருங்கியது முகிலனின் சைக்கிள். எதிரே வாகனம் வந்தால்கூட தெரியாத அளவிற்கான வளைவு அது. முகிலன் கொஞ்சம்கூட சைக்கிளின் வேகத்தைக் குறைக்கவில்லை.
                     குமரன் கண்கள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டான். ‘எதிரில் கார் வருது... என்ன இந்தப் பையனுங்க சைக்கிளை இப்படி ஓட்டுறானுங்க?’ என அந்தத் திருப்பத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவர் நினைத்தார். “முகிலன்ன்ன்ன்! பார்த்து..” எனக் கத்தியே விட்டான் குமரன்.  “கவலைப்படாத குமரா! நான் உன்னைப் பத்திரமா போய் சேர்த்துருவேன்” எனக் கூறிவிட்டு சைக்கிளின் வேகத்தை மேலும் கூட்டினான் முகிலன். ‘என்ன நடந்தாலும் குமரனை உடனே போய் அங்க சேர்த்திடணும்’ என முகிலன் மனதில் உறுதி எடுத்துக் கொண்டான். சாலையில் முகிலன் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்த பலர் அவனைத் திட்டியிருப்பார்கள். கடுமையான சொற்களைக் கொண்டு அவன் மீது கோபம் கொண்டிருப்பார்கள். முகிலனின் கால்கள் அதை உணரவில்லை. அவனுடைய குறிக்கோள் அனைத்தும் உரிய நேரத்தில் குமரனைக் கொண்டு சேர்ப்பதுதான்.
                  10 நிமிடத்திற்குள் முகிலனும் குமரனும் சைக்கிளுடன் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் வளாகத்திற்குள் நுழைந்தார்கள். மணி 2.00-ஐ நெருங்கியிருந்தது. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு குமரனின் புத்தகப்பையை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு முகிலன்தான் முன்னே ஓடினான். “சார்ர்ர்ர்ர்.. நடனப் போட்டி எந்த இடத்துலே நடக்குது?” என மூச்சிரைக்க எதிரில் வந்த ஆசிரியரிடம் கேட்டான் முகிலன். பிறகு மேலே இரண்டாவது மாடியிலுள்ள மண்டபத்தை நோக்கி ஓடினான். குமரன் திகைப்புடன் முகிலனைப் பின் தொடர்ந்து ஓடி வந்து கொண்டிருந்தான். மண்டபம் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என நிறைந்து காணப்பட்டது.
                      அங்கும் இங்கும் தேடியப் பிறகு முகிலன் குமரனின் நண்பர்கள் ஓர் ஓரமாய் கவலையில் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டான். குமரனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவர்களை நோக்கி ஓடினான். “குமரன் வந்துட்டான்! குமரன்...” அங்கிருந்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர். குமரன் சரியான நேரத்திற்குப் போயிருக்காவிட்டால் அவர்களின் 7 பேர் அடங்கிய நடனக்குழு போட்டியில் பங்கெடுத்திருக்க முடியாது. அவசர அவசரமாக குமரனும் அவனுடைய குழு உறுப்பினர்களும் உடையை மாற்றிவிட்டு நடனத்திற்குத் தயாராகினார்கள். பாடல் ஒலித்ததும் குமரனின் குழு மிகச் சிறப்பாக ஆடத் துவங்கினர். குமரன் ஆடிக் கொண்டிருந்தாலும் அவனுடைய கலங்கிய கண்கள் மண்டபத்தில் தன்னுடைய நண்பன் முகிலன் எங்கு நின்று கொண்டிருக்கிறான் என்றே தேடிக்கொண்டிருந்தன.

சிறுவர் சிறுகதை :அல்ட்ராமேன் சைக்கிள்
Image result for ultraman bicycle


                         சன்னலுக்கு அருகில் தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளை வெகுநேரம் கதவை உரசிக் கொண்டிருந்தது. முகிலன் மெல்ல கண்களைத் திறந்தான். சன்னல் கதவின் சிறு துளையிலிருந்து உள்ளே நுழைந்த ஒளி அவன் முகத்தில் படர்ந்தது. தம்பி அழும் சத்தம் அவனுடைய காதைக் குடைந்தது. வெளியே வந்து சத்தம் கேட்டத் திசையை நோக்கிச் சென்றான். ஒரு கால் உடைந்த தம்பியின் சைக்கிள் முன்வாசல் கதவோரம் கிடந்தது.  “தம்பி சைக்கிள் உடைஞ்சிருப்பா” என அம்மா கூறிவிட்டு அவனைச் சமாதானப்படுத்துவதில் மும்முரமாக ஆனார். எப்பொழுதும் இந்நேரம் முகிலனின் தம்பி சைக்கிள்தான் உலா வந்து கொண்டிருப்பான். மதியம் மெல்ல தொடங்கும் அந்தச் சைக்கிள் சத்தம் மாலை முகிலனின் அப்பா வரும்வரை அடங்காது. இரவில் அவன் படுத்துறங்கியதும் முகிலனின் அப்பா சைக்கிளை எடுத்து மேலே மாட்டி வைத்துவிடுவார். இப்பொழுது சைக்கிள் பரிதாபகாமக் கிடந்தது. ஒரு கால் இல்லாமல் சைக்கிளைத் தம்பியால் ஓட்ட முடியாது. அம்மா என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பியிருந்தார். தம்பி அழுகையை நிறுத்துவதாகத் தெரியவில்லை. தேம்பி தேம்பி அழுதான். 
                 முகிலன் வீட்டுக்கு வெளியே யோசனையுடன் வந்து நின்றான். சுற்றும் முற்றும் பார்த்தான். இரண்டு வீடு தள்ளி இருக்கும் அவனுடைய நண்பனிடம் சங்கிளி அறுந்த ஒரு பழைய சைக்கிள் இருப்பது ஞாபகத்திற்கு வந்தது. ஆனால், அவன் வீட்டுக்குப் போனாள் அவனுடைய அம்மா தூரத்திலேயே முகிலனைத் திட்டத் தொடங்கிவிடுவார். மெதுவாக வீட்டைவிட்டு வெளியேறி மாலனின் வீட்டுக்குச் சென்றான். காற்று அவன் உடலை உரசிச் சென்றது. நல்லவேளை மாலம் வெளியில்தான் இருந்தான். “டே.... இங்க வா” என முகிலன் மெதுவான குரலில் மாலனை அழைத்தான். மாலன் வேலிக்கு அருகில் வந்து முகிலனைப் பார்த்தான். “எனக்கு உன்னோட அந்தப் பழைய சைக்கிள் வேணும்டா... கொஞ்ச நேரம் கொடுக்க முடியுமா?” எனக் கேட்டுவிட்டு அந்தச் சைக்கிளையே பார்த்து நின்றான்.
                                      முகிலன் அவன் அம்மாவுக்குத் தெரியாமல் முன்கதவை மெல்ல திறந்து அந்தப் பழைய சைக்கிளை உருட்டிக் கொண்டு வெளியே வந்தான். முகிலனும் முகமெல்லாம் மலர்ச்சி. சங்கிலி இல்லாத சைக்கிள் ஓடப்போவதில்லை. முகிலனை ஆச்சர்யமாகப் பார்த்தான் மாலன். “இதை எப்படிடா ஓட்ட போறே?” எனக் கேட்டுவிட்டு முன்கதவை அடைத்தான். முகிலன் பதில் ஏதும் சொல்லாமல் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான். அவனைவிட கொஞ்சம் உயரமான சைக்கிள் அது. வீட்டை நெருங்க நெருங்க தம்பியின் ஓயாத அழும் குரல் வேகமாகக் கேட்டது. முகிலனால் அதைக் கேட்கமுடியவில்லை. சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான். “குமரா! வெளிய பாரு அண்ணன் பெரிய சைக்கிள் கொண்டு வந்துருக்கேன். வந்து பாருங்க.. அல்ட்ரமேன் சைக்கிள் இது” எனக் கண்களைப் பெரிதாக்கிக் காட்டினான் முகிலன். தம்பி அழுது வீங்கிய கண்களுடன் வெளியே வந்தான். தம்பியைத் தூக்கி சைக்கிளின் இடைக் கம்பியில் உட்கார வைத்தான். பின்னர், முகிலன் சைக்கிளில் ஏறி கால்கள் இரண்டையும் தரையில் வைத்துச் சைக்கிளைத் தள்ளினான். தம்பியின் அழுகை நின்று இலேசாகச் சிரிக்கத் துவங்கினான். சங்கிலி இல்லாத அந்த அல்ட்ராமேன் சைக்கிள் முகிலனின் காலால் ஓடிக் கொண்டிருந்தது.