புதன், 14 செப்டம்பர், 2016

சிறுவர் சிறுகதை: ஓரம் போ

                   பரப்பரப்பான நகரத்தின் சாலை அது. வாகனங்கள் அங்கும் இங்குமாக அலைமோதிக் கொண்டிருந்தன. ‘பீங்! பீங்!’ என வாகனங்கள் எழுப்பிய சத்தங்கள் காதைத் துளைத்தன. சாலையோரங்களில் நின்று கொண்டிருந்தவர்கள் சாலையைக் கடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர். “சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என வேகமாக அந்த வாகன நெரிசலை உடைத்துக் கொண்டு முகிலனின் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. சாலையின் ஓரமாக முகிலன் சைக்கிளை வேகமாகச் செலுத்திக்கொண்டிருந்தான்.
                      அவனுக்கு முன்னால் சைக்கிளின் பிடியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் குமரன் நடுங்கியே போய்விட்டான். “வேகமா போவதே! பயமா இருக்கு..” எனக் கத்தினான் குமரன். முகிலன் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவன் சைக்கிளைப் பலம் கொண்டு மிதிப்பதிலேயே கவனமாக இருந்தான். உணவகத்தில் அமர்ந்திருந்தவர்களில் சிலர் முகிலனைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தனர்.  “ஸ்கூல் உடுப்பைப் போட்டுக்கிட்டு... பாருங்க... என்னா பண்றானுங்க நம்ப பையனுங்க” என ஒருவர் ஆதங்கத்தோடு கூறினார்.                               முகிலன் காதில் எதுவுமே விழவில்லை. சைக்கிளின் மிதியை மேலும் வேகமாக மிதித்தான். குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்குப் போய் சேர்ந்தாக வேண்டும் என மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தான். மதிய வெயில் தலையைச் சுட்டது. ஒரு முற்சந்தியை நெருங்கியது முகிலனின் சைக்கிள். எதிரே வாகனம் வந்தால்கூட தெரியாத அளவிற்கான வளைவு அது. முகிலன் கொஞ்சம்கூட சைக்கிளின் வேகத்தைக் குறைக்கவில்லை.
                     குமரன் கண்கள் இரண்டையும் இறுக மூடிக் கொண்டான். ‘எதிரில் கார் வருது... என்ன இந்தப் பையனுங்க சைக்கிளை இப்படி ஓட்டுறானுங்க?’ என அந்தத் திருப்பத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெரியவர் நினைத்தார். “முகிலன்ன்ன்ன்! பார்த்து..” எனக் கத்தியே விட்டான் குமரன்.  “கவலைப்படாத குமரா! நான் உன்னைப் பத்திரமா போய் சேர்த்துருவேன்” எனக் கூறிவிட்டு சைக்கிளின் வேகத்தை மேலும் கூட்டினான் முகிலன். ‘என்ன நடந்தாலும் குமரனை உடனே போய் அங்க சேர்த்திடணும்’ என முகிலன் மனதில் உறுதி எடுத்துக் கொண்டான். சாலையில் முகிலன் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்த பலர் அவனைத் திட்டியிருப்பார்கள். கடுமையான சொற்களைக் கொண்டு அவன் மீது கோபம் கொண்டிருப்பார்கள். முகிலனின் கால்கள் அதை உணரவில்லை. அவனுடைய குறிக்கோள் அனைத்தும் உரிய நேரத்தில் குமரனைக் கொண்டு சேர்ப்பதுதான்.
                  10 நிமிடத்திற்குள் முகிலனும் குமரனும் சைக்கிளுடன் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் வளாகத்திற்குள் நுழைந்தார்கள். மணி 2.00-ஐ நெருங்கியிருந்தது. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு குமரனின் புத்தகப்பையை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு முகிலன்தான் முன்னே ஓடினான். “சார்ர்ர்ர்ர்.. நடனப் போட்டி எந்த இடத்துலே நடக்குது?” என மூச்சிரைக்க எதிரில் வந்த ஆசிரியரிடம் கேட்டான் முகிலன். பிறகு மேலே இரண்டாவது மாடியிலுள்ள மண்டபத்தை நோக்கி ஓடினான். குமரன் திகைப்புடன் முகிலனைப் பின் தொடர்ந்து ஓடி வந்து கொண்டிருந்தான். மண்டபம் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என நிறைந்து காணப்பட்டது.
                      அங்கும் இங்கும் தேடியப் பிறகு முகிலன் குமரனின் நண்பர்கள் ஓர் ஓரமாய் கவலையில் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டான். குமரனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவர்களை நோக்கி ஓடினான். “குமரன் வந்துட்டான்! குமரன்...” அங்கிருந்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர். குமரன் சரியான நேரத்திற்குப் போயிருக்காவிட்டால் அவர்களின் 7 பேர் அடங்கிய நடனக்குழு போட்டியில் பங்கெடுத்திருக்க முடியாது. அவசர அவசரமாக குமரனும் அவனுடைய குழு உறுப்பினர்களும் உடையை மாற்றிவிட்டு நடனத்திற்குத் தயாராகினார்கள். பாடல் ஒலித்ததும் குமரனின் குழு மிகச் சிறப்பாக ஆடத் துவங்கினர். குமரன் ஆடிக் கொண்டிருந்தாலும் அவனுடைய கலங்கிய கண்கள் மண்டபத்தில் தன்னுடைய நண்பன் முகிலன் எங்கு நின்று கொண்டிருக்கிறான் என்றே தேடிக்கொண்டிருந்தன.

சிறுவர் சிறுகதை :அல்ட்ராமேன் சைக்கிள்
Image result for ultraman bicycle


                         சன்னலுக்கு அருகில் தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளை வெகுநேரம் கதவை உரசிக் கொண்டிருந்தது. முகிலன் மெல்ல கண்களைத் திறந்தான். சன்னல் கதவின் சிறு துளையிலிருந்து உள்ளே நுழைந்த ஒளி அவன் முகத்தில் படர்ந்தது. தம்பி அழும் சத்தம் அவனுடைய காதைக் குடைந்தது. வெளியே வந்து சத்தம் கேட்டத் திசையை நோக்கிச் சென்றான். ஒரு கால் உடைந்த தம்பியின் சைக்கிள் முன்வாசல் கதவோரம் கிடந்தது.  “தம்பி சைக்கிள் உடைஞ்சிருப்பா” என அம்மா கூறிவிட்டு அவனைச் சமாதானப்படுத்துவதில் மும்முரமாக ஆனார். எப்பொழுதும் இந்நேரம் முகிலனின் தம்பி சைக்கிள்தான் உலா வந்து கொண்டிருப்பான். மதியம் மெல்ல தொடங்கும் அந்தச் சைக்கிள் சத்தம் மாலை முகிலனின் அப்பா வரும்வரை அடங்காது. இரவில் அவன் படுத்துறங்கியதும் முகிலனின் அப்பா சைக்கிளை எடுத்து மேலே மாட்டி வைத்துவிடுவார். இப்பொழுது சைக்கிள் பரிதாபகாமக் கிடந்தது. ஒரு கால் இல்லாமல் சைக்கிளைத் தம்பியால் ஓட்ட முடியாது. அம்மா என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பியிருந்தார். தம்பி அழுகையை நிறுத்துவதாகத் தெரியவில்லை. தேம்பி தேம்பி அழுதான். 
                 முகிலன் வீட்டுக்கு வெளியே யோசனையுடன் வந்து நின்றான். சுற்றும் முற்றும் பார்த்தான். இரண்டு வீடு தள்ளி இருக்கும் அவனுடைய நண்பனிடம் சங்கிளி அறுந்த ஒரு பழைய சைக்கிள் இருப்பது ஞாபகத்திற்கு வந்தது. ஆனால், அவன் வீட்டுக்குப் போனாள் அவனுடைய அம்மா தூரத்திலேயே முகிலனைத் திட்டத் தொடங்கிவிடுவார். மெதுவாக வீட்டைவிட்டு வெளியேறி மாலனின் வீட்டுக்குச் சென்றான். காற்று அவன் உடலை உரசிச் சென்றது. நல்லவேளை மாலம் வெளியில்தான் இருந்தான். “டே.... இங்க வா” என முகிலன் மெதுவான குரலில் மாலனை அழைத்தான். மாலன் வேலிக்கு அருகில் வந்து முகிலனைப் பார்த்தான். “எனக்கு உன்னோட அந்தப் பழைய சைக்கிள் வேணும்டா... கொஞ்ச நேரம் கொடுக்க முடியுமா?” எனக் கேட்டுவிட்டு அந்தச் சைக்கிளையே பார்த்து நின்றான்.
                                      முகிலன் அவன் அம்மாவுக்குத் தெரியாமல் முன்கதவை மெல்ல திறந்து அந்தப் பழைய சைக்கிளை உருட்டிக் கொண்டு வெளியே வந்தான். முகிலனும் முகமெல்லாம் மலர்ச்சி. சங்கிலி இல்லாத சைக்கிள் ஓடப்போவதில்லை. முகிலனை ஆச்சர்யமாகப் பார்த்தான் மாலன். “இதை எப்படிடா ஓட்ட போறே?” எனக் கேட்டுவிட்டு முன்கதவை அடைத்தான். முகிலன் பதில் ஏதும் சொல்லாமல் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான். அவனைவிட கொஞ்சம் உயரமான சைக்கிள் அது. வீட்டை நெருங்க நெருங்க தம்பியின் ஓயாத அழும் குரல் வேகமாகக் கேட்டது. முகிலனால் அதைக் கேட்கமுடியவில்லை. சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான். “குமரா! வெளிய பாரு அண்ணன் பெரிய சைக்கிள் கொண்டு வந்துருக்கேன். வந்து பாருங்க.. அல்ட்ரமேன் சைக்கிள் இது” எனக் கண்களைப் பெரிதாக்கிக் காட்டினான் முகிலன். தம்பி அழுது வீங்கிய கண்களுடன் வெளியே வந்தான். தம்பியைத் தூக்கி சைக்கிளின் இடைக் கம்பியில் உட்கார வைத்தான். பின்னர், முகிலன் சைக்கிளில் ஏறி கால்கள் இரண்டையும் தரையில் வைத்துச் சைக்கிளைத் தள்ளினான். தம்பியின் அழுகை நின்று இலேசாகச் சிரிக்கத் துவங்கினான். சங்கிலி இல்லாத அந்த அல்ட்ராமேன் சைக்கிள் முகிலனின் காலால் ஓடிக் கொண்டிருந்தது.

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

இது சுங்கைப்பட்டாணியின் கதைகள் :







                     பன்றி பாலம் இதற்கு முன் சுங்கை பட்டாணியில் அதாவது 2013 ஆம் ஆண்டு வரை வசித்தவர்களுக்கு நிச்சயம் பன்றி பாலம் எனச் சொன்னதும் தைப்பூசக் கோவிலுக்குப் பின்னால் இருந்த ஒற்றை பாலம் ஞாபகத்திற்கு வரும். இப்பொழுது அந்தப் பாலம் அங்கு இல்லை. இடித்துப் பெரிதாக்கி பெரிய சாலையை உருவாக்கிவிட்டார்கள். அப்பாதைப் பத்தானி ஜெயா/பெர்ஜாயா வசிப்பிடப் பகுதியையும் சுங்கை பட்டாணி நகரத்தையும் இணைக்கும்வகையில் கொஞ்சம் பரப்பரப்பாகவும் ஆகிவிட்டது. பாலம் என்றால் எதோ போக்குவரத்துக்கு இக்கறையிலிருந்து அக்கறைக்குத் தாவ உதவும் ஒன்றாக மட்டும் இருந்துவிடுவதில்லை. பாலம் நம் வாழ்நாளில் நம் வாழ்க்கைக்குள் ஓர் இடத்தைக் கொண்டிருக்கிறது. பல நினைவுகளைச் சேகரித்து வைத்திருக்கிறது. ஒரு காலக்கட்டத்தை எப்பொழுதுமே நினைவுப்படுத்தக்கூடியவை. என் அம்மா கடந்த 1990களில் அந்தப் பாலத்தில்தான் தனது மினி சைக்கிளில் என்னை ஏற்றிக்கொண்டு பட்டணத்திற்குச் செல்வார். சீனர் வீட்டில் அம்மா வீட்டு வேலை செய்துகொண்டிருந்த காலம் அது. வெள்ளிக்கிழமை நானும் அம்மாவுடன் சென்று ஒத்தாசையாக இருப்பேன். அப்பொழுதெல்லாம் வேலை சீக்கிரம் முடிந்துவிட்டால் அம்மா என்னைச் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அந்தப் பாலத்தைக் கடந்துதான் பொருள்கள் வாங்க சுங்கை பட்டாணிக்குச் செல்வார். ஈரம் சொட்டும் கைலியுடன் அம்மா சைக்கிளை மிதிக்க, என்னைச் சமாதானம் செய்யக் கொடுக்கப்பட்ட ஏதாவது ஒரு பொருளைக் கையில் கடவுளை ஏந்திக் கொண்டு வருவதைப் போல பயப்பக்தியுடன் பிடித்துக் கொண்டு நான் அமர்ந்திருக்க, இருவரும் அந்தப் பன்றி பாலத்தைக் கடப்போம். ஏதோ படகில் உல்லாசமாக ஆற்றைக் கடப்பதைப் போன்று பிரமையாக இருக்கும். பன்றி பாலம் உருவான கதை சுங்கை பட்டாணி பொது பேருந்து நிருத்தம் பக்கமாக வந்தீர்கள் என்றால் ஒரு கறுப்பு ஆறு குறுக்காக ஓடுவதைப் பார்க்கலாம். குப்பைகள் மிதந்து செல்லும். ஒருவர்கூட அந்த ஆற்றை ஆயாசமாகப் பார்த்து இரசிக்கும் எந்தக் காட்சியையும் பார்க்க முடியாது. நம்முடைய அனைத்து அலட்சியங்களையும் ஒன்று சேர்த்தால் அது நிச்சயம் அந்தக் கறுப்பு ஆறாக இருக்கும். அந்த ஆற்றிற்கு மேலே குறுக்காக இரயில் தண்டவாளம் உண்டு. கரும்புகையுடன் இரயில் அவ்விடத்தைக் கடக்கும் காட்சியை அந்தக் கருப்பாறோடு சேர்த்துப் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும் மலேசியாவிலேயே காற்றுத்தூய்மைக்கேட்டில் சுங்கைப்பட்டாணி பட்டணம் இரண்டோ மூன்றாவது இடத்தையோ பெற்றிருக்கும் தகவல். அந்தக் கருப்பாறின் ஒரு பகுதியைக் கடக்கத்தான் 1900களின் ஆரம்பத்தில் அந்தப் பன்றி பாலம் கட்டப்பட்டது என ஒரு செய்தி உண்டு. 1930களில் அப்பாலம் இடிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஜப்பான் இராணுவம் பிறகு அப்பாலத்தைச் சீரமைத்து வேறு மாதிரி கட்டியதாகவும் சொல்கிறார்கள். 1942களில் சுங்கை பட்டாணி பட்டணத்தின் பெரும்பான்மையான பகுதியை ஜப்பான் இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருந்தது. அவர்களுடைய சிகிச்சைக்கான மருந்துகள் போன்றவற்றை பதுக்கி வைத்த இடமாகச் சுங்கை பட்டாணி பட்டணம் இருந்திக்கிறது என சில முதியோர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களே அப்பன்றி பாலத்தை மீண்டும் சீரமைத்துக் கட்டினார்கள் என்று நம்பலாம். பிறகு 1960 வாக்கில் அப்பன்றி பாலம் மேலும் சீரமைத்துப் புதுப்பிக்கப்பட்டது. அதன் பிறகான பாலத்தின் வரலாற்றில் அதிகப்படியாக மக்களின் பரப்பரப்பு மட்டுமே நீடித்திருந்தது. பன்றி பாலம் எனப் பெயர் வந்த கதை அப்பாலத்தின் அக்கறையோரம் அதாவது சுப்ரமண்ய ஆலயத்தின் பின்வாசலையொட்டிய பகுதியில் ஒரு சீனன் வெகுகாலமாக பன்றி கொட்டாய் வைத்திருந்தான். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாக அவனால் ஆலயத்திற்குப் பல பிரச்சனைகள். ஒவ்வொருநாளும் பன்றிகளை அக்கொட்டாயிலேயே வைத்து அறுத்துப்போடும் சத்தம் ஆலயத்தின் நிர்வாகத்திற்கும் அங்கு வரும் முருகப் பக்தர்களுக்கும் பெரும் சிக்கலாக இருந்ததாகப் பலமுறை பத்திரிகைகளில் பிரசுரம் கண்டது. பல ஆண்டுகளுக்கு அவ்விடம் யாருக்கு என்கிற வழக்குத் தகறாருகள் நீண்டப்படியே இருந்தன. இந்த நாட்டில் மட்டும்தான் சிறுபாண்மை இனத்தின் நம்பிக்கைகளுக்குப் பிரச்சனைகள் வந்தப்படியாகவே இருக்கின்றன. கோவில் தொடர்பான பிரச்சனைகள் காலத்திற்கும் இந்திய மக்களை உணர்ச்சிப்பூர்வமான மனநிலைக்கு மாற்றியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஒரு கட்டியெழுப்பப்பட்ட கொந்தளிப்பு அனைவரின் உள்ளங்களிலும் உறைந்து வருகின்றன.  அப்படிப்பட்ட ஒரு கடுமையான போராட்டம் சுங்கை பட்டாணியில் பெரும் பரப்பரப்பையே உருவாக்கியிருந்தது. அடிக்கடி பத்திரிகைகளில் அவை தலைப்புச் செய்திகளாக வந்து கொண்டிருந்தன. அக்காலக்கட்டத்தில்தான் பன்றி ஒரு பிரச்சனையின் அடையாளமாக அனைவரின் பேச்சிலும் இடம்பெறத் தொடங்கின. எப்பொழுது என்று சரியாகக் கணிக்க முடியாத ஒரு நாளில் அந்தப் பன்றி கொட்டாயையொட்டி இருக்கும் அப்பாலத்திற்கும் பன்றி பாலம் எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கலாம். பன்றி பாலத்தின் தோற்றம் ஒரு நேரத்தில் இரு மோட்டார்கள் மட்டுமே எதிரும் புதிருமாகப் போக முடியும். மிகச் சிறிய இடைவேளி கொண்ட பாலம் அது. கார்கள் எல்லாம் நுழையவே முடியாது. சைக்கிளோட்டிகளுக்கும் மோட்டாரோட்டிகளுக்கும் மட்டுமே அப்பாலம் கட்டப்பட்டிருந்தது. இடிக்காமல் மிகவும் இலாவகமாகக் கடக்க அனைவரும் காலப்போக்கில் தேர்ச்சிப்பெற்றிருந்தார்கள். சுங்கை பட்டாணி நகரத்திற்குக் குறுக்கு வழியில் செல்ல இப்பாலமே போக்குவரத்து. இல்லையென்றால் மேலும் 8 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டும். ஆகையால், மோட்டாரோட்டிகள் இப்பாலத்தைக் கடக்கும்போது பொறுமையை அநியாயத்திற்குக் கடைப்பிடிக்கக் கற்றிருந்தார்கள். யாராவது எப்பொழுதுதாவது அப்படி நெருக்கமாகக் கடக்கும்போது சிரித்து வைப்பார்கள். ஒரு மோட்டாரும் இன்னொரு மோட்டாரும் சாமர்த்தியமாக இடிக்காமல் கடக்கும்போது புன்னகையால் நன்றியை வெளிப்படுத்திக்கொள்வார்கள். யாரிடமும் கோபம் இருக்காது. அவசரம் இருக்காது. சீனப்பாட்டிகள் அப்பாலத்தை அடிகடி பயன்படுத்துவார்கள். அவர்கள் சைக்கிளில் வருவதைப் பார்த்தால் நாம் பின் வாங்க வேண்டும். அவர்கள் ஒதுங்கி வழிவிடமாட்டார்கள். அந்தப் பாலத்தை அவர்கள்தான் கட்டியதைப் போன்று பயங்கரத் தோரணையுடன் காட்சியளிப்பார்கள். இரும்பாலும் தாராலும் சூழப்பட்ட அப்பாலம் பின்னாளில் மோட்டாரோட்டிகளின் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறியது. பன்றி பாலத்தின் இன்னபிற கதைகள்: தற்கொலை சம்பவம்  என் காலத்தில் நடந்த சம்பவம் ஆகும். முதன்முறையாகப் பாலத்தையொட்டிய குடியிருப்புகளை அதிர வைத்த தற்கொலை சம்பவம். ஓர் அதிகாலையில் தன் மோட்டாரை அந்தப் பாலத்தின் நடுவில் நிற்க வைத்துவிட்டு அந்தச் சீன இளைஞர் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். 4 மணி நேரத்திற்குப் பிறகே அவருடைய உடலைக் கண்டறிந்தார்கள். அந்த மோட்டாரும் உடனே அங்கிருந்து அகற்றப்பட்டது. அதன்பிறகு அந்தப் பன்றி பாலம் கொஞ்சம் கொஞ்சமாகப் பேய் பாலம் என்றே அறியப்படிருக்கலாம் என நினைக்கிறேன். நான் எப்பொழுதுதாவது அந்தியில் நயனம் இதழ் வாங்குவதற்காக அப்பாலத்தில் தனியாகச் சைக்கிளில் போகும்போது மனம் பதறும். யாரோ பின் தொடரும் ஓர் அபத்தமான பயம் தோன்றி மறையும். மேலும். யாரோ சீனன் அங்கு நடமாடுவதாகவும் ஒரு பழைய சீனப்பாட்டின் சத்தம் அங்குக் கேட்கும் என்றும் அம்மா சொல்லிக் கேட்டதுண்டு. அந்தச் சீனரின் தற்கொலை சம்பவம் பிறகு அங்குப் பேசுப்பொருளாக மாறியது. பாலத்தின் மீது எப்பொழுதுமான ஓர் அச்சம் எல்லோர் மனத்திலும் குடியேறியது. இரவில் தனியாக யாரும் அந்தப் பாலத்தைக் கடப்பதில்லை. கொடூர விபத்து பிறகு 1990களின் ஆரம்பத்தில் இன்னொரு கடுமையான விபத்து அந்தப் பாலத்தில் நடந்தது. அந்தப் பாலத்தின் முச்சந்தியில் எப்பொழுதும் போலிஸ் மோட்டாரோட்டிகளைப் பரிசோதிப்பதுண்டு. பாலம் ஏறி அவை முடியும் இடத்தில் சட்டென தென்படும்படி போலிஸ் எப்பொழுதும் பரிசோதனை செய்ய நிற்பதுண்டு. யாரும் மீண்டும் திரும்பியோடி தப்பிக்க முடியாது. ஆகையால் பாலம் ஏறிவிட்டால் எதிரில் வரும் மோட்டாரோட்டிகளிடம் போலிஸ் இருக்கிறார்களா எனக் கண்களிலேயே விசாரிக்கும் பழக்கம் எல்லோருக்கும் உண்டு. அது அங்கு ஒரு வாடிக்கையான உடல்மொழி. அல்லது எதிரில் வரும் மோட்டார் தனது விளக்கைத் திறந்து அணைத்தால் அது போலிஸ் இருக்கிறார்கள் எனும் தகவலைத் தெரிவிக்கும் உத்தியாகும். அப்பாலத்தில் பயணம் செய்யும்போது மட்டும் அது அனைவரின் கடமையுணர்வாக இருந்தது. நான் பலமுறை மோட்டாரில் அப்பாலத்தைக் கடக்கும்போது போலிஸ் விசாரணைக்காக நிறுத்தியதுண்டு. அப்படியொரு சமயம் போலிஸின் பிடியிலிருந்து தப்பிக்க தொப்பியணியாமல் வந்த இரு இளைஞர்கள் மீண்டும் அப்பாலத்தில் கடும் வேகத்துடன் மோட்டாரில் போயிருக்கிறார்கள். எதிரில் வந்த சைக்கிளை மோதி அந்த மோட்டார் இரு பக்கமும் இருந்த கம்பிகளில் மோதி ஒருவன் அங்கேயே இறந்துவிட்டான், இன்னொருவன் ஆற்றில் விழுந்து இறந்தான். இரத்தம் தெறிக்க அவர்களின் மரணம் அப்பாலத்தில் கடுமையாக நிகழ்ந்தது. அதற்கு முன்பும் பல விபத்துகள் நடந்திருக்கலாம் என்பதையே அந்தச் சமபவம் ஞாபகப்படுத்தியது . என்னுடைய ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ நாவலில் இந்தப் பன்றி பாலத்தைப் பற்றி சில இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். நம் நகரங்களை நாம் வாழ்ந்த இடங்களை ஆவணப்படுத்த வேண்டியுள்ளது. அதன் பிறகு திடீரென ஒரு நாள் அந்தப் பன்றி கொட்டாய் காலி செய்யப்பட்டது. வழக்கு சுப்ரமண்ய ஆலயத்திற்கு ஆதரவாக இருந்து வெற்றிப்பெற்றது. பாலம் சுத்தம் செய்யப்பட்டது போல எல்லோரும் உணர்ந்தார்கள். ஒரு சிறிய இனத்தின் வெற்றியாக அது கொண்டாடப்பட்டது. இந்து கோவில்கள் மட்டுமே மலேசியாவில் அதிகப்படியான நிலப்பிரச்சனைகளுக்கு ஆளாகியிருந்தன. நான் அதைச் சமயம் சார்ந்து பார்க்கவில்லை; உரிமை சார்ந்து கவனிக்கின்றேன். 2013ஆம் ஆண்டு அப்பாலம் மெல்ல மெல்ல இடிக்கப்பட்டு அங்கொரு பெரிய சாலை கட்டப்பட்டது. இப்பொழுது ஆற்றைக் கடந்து கார்களும் கனவுந்துகளும் சென்று கொண்டிருக்கின்றன. அதுவரை ஏதோ மறைந்து இருந்த சுப்ரமண்ய ஆலயம் காரில் வருவோர் போவோரின் பார்வையில் தெளிவாகத் தெரியத் துவங்கியது. காரிலிருந்து கொண்டே ஆலயத்தின் பூஜை செய்யப்படும் இடத்தைப் பார்க்கலாம். சிலர் காரில் இருந்துகொண்டே கிண்டலடிக்கவும் செய்தார்கள். ஏதோ பாதுகாப்பின்றி திடிரென்று முருகப்பெருமான் வாசலுக்கு வந்துவிட்டார் என நண்பரின் அம்மா சொல்லிப் புலம்பியதையும் கேட்டேன். பன்றி பாலத்தைத் தொலைத்ததும் இப்படியொரு உணர்வு எல்லோருக்கும் வரத்துவங்கியது. நகரம் ஒவ்வொருமுறையும் அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்படுகிறது. அப்படி மீண்டும் கட்டப்படுகையில் நாம் ஒரு புராதமான அடையாளங்களைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. சுங்கை பட்டாணி நகரத்தின் ஒரு புராதனமான நினைவாக அந்தப் பன்றி பாலம் அனைவரின் நினைவுகளிலும் இருக்கின்றது. இப்பொழுது அந்த ஆற்றை எந்தச் சிரமமும் இல்லாமல் கடக்க முடிகின்றது. யாரும் யாரும் முகம் பார்த்து சிரித்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் இல்லை. சின்ன சின்ன விட்டுக்கொடுத்தல் இல்லை. கையசைப்பு இல்லை. புன்னகையும் இல்லை. இவையாவும் வளர்ச்சி எனக் கொள்வாயோ மனமே?

                   ‘பெண்ணினம் சார்ந்து மனித மூளை கொள்ளும் எதிர்வினைகளுக்கும் பிற ஜீவராசிகள் கொள்ளும் எதிர்வினைகளுக்கும் சம்பந்தம் இல்லை. மனித மூளை மட்டுமே பெண்ணினத்தை அடக்க முயல்கிறது’ – சுந்தர ராமசாமி        (செப்டம்பர் 2002) 2002ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இடைநிலைப்பள்ளியில் ஆறாம் படிவம் படித்துக் கொண்டிருக்கும்போது நண்பர் காளிதாஸ் மூலமே அவருடைய அண்ணன் எழுத்தாளர் சு.யுவராஜன் பற்றி தெரிய வந்தது. அப்பொழுது அவர் மலாயாப்பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். ‘ஊதுபத்தி சிறுவன்’ சிறுகதையை வாசிக்கும்படி நண்பர்கள் கேட்டுக்கொண்டனர். அப்பொழுது தமிழ் இலக்கியத்திலும் வாசிப்பதிலும் கொஞ்சம் ஆர்வம் இருந்ததால் அவருடைய அக்கதையைப் படித்தேன். மொழி பற்றியோ உத்திகள் பற்றியோ எவ்வித பரிச்சயமும் பெற்றிருக்காத அக்காலக்கட்டத்தில் ‘ஊதுபத்தி சிறுவன்’ எனக்குள் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அதன் பிறகு 2005ஆம் ஆண்டில் காதல் இதழ் வாசிக்கத் துவங்கியிருந்தேன். அதன் வழி சு.யுவராஜனின் தனித்துவமான எழுத்துகளை வாசிக்க முடிந்தது. மலேசியத் தமிழ் இலக்கியத்தில் ஒருவரின் மொழியாளுமையைக் கண்டு நான் பிரமித்தேன் என்றால் அது சு.யுவராஜனின் மொழியே. அப்பொழுதே சற்று மாறுப்பட்டு ஜனரஞ்சகத்தன்மைகள் இல்லாமலிருந்தது. சில காலங்கள் கடந்தே அவருடைய அல்ட்ரோமேன் சிறுகதையையும் வாசித்தேன். அப்பொழுதும் இப்பொழுதும் சு.யுவராஜனின் கதைகளில் அல்ட்ரோமேன் எனக்கு நெருக்கமானதாக உணர்ந்திருக்கிறேன். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவர் தீவிரமான வாசிப்பின் மூலம் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் கவனிக்கத்தகுந்த அளவிலான தோட்டப்புற வாழ்வியலை மையப்படுத்தி சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு முறை 2007ஆம் ஆண்டில் மாணவர்ப் பிரிவுக்காகத் தமிழ்ப்பேரவை சிறுகதை போட்டியில் எனக்கும் நண்பர் சுந்தரேஷ்வரனுக்கும் பரிசை அறிவித்திருந்தார்கள். அதுதான் சிறுகதைக்காக நான் பெறப்போகும் முதல் பரிசு. காலையிலேயே நண்பர் வினோத்குமார் மூலம் அவர்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி வீட்டின் அறைக்குள் நுழைந்தபோது சு.யுவராஜன் அங்கு வரவேற்பரையின் தரையில் சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தார். தான் தமிழ்ப்பேரவை கதை எழுதும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டதாகவும் அடுத்தவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்றும் பரிசும் போட்டியும் ஆரம்பநிலை எழுத்தாளனுக்கே தகும் என்றும் மிகவும் முதிர்ச்சியாக உரையாடினார். இத்தனை இளம் வயதிலேயே அவர் மிகவும் அப்பாற்பட்ட சிந்தனையைக் கொண்டிருந்தார். இவருடைய அல்ட்ரோமேன் சிறுகதை 2004ஆம் ஆண்டில் மலேசியத் தேசிய பல்கலைக்கழகத்தின் சிறுகதை போட்டியில் முதல் பரிசை வென்ற கதையாகும். 1.   அல்ரோமேன் சமூகத்தில் உருவாக்கும் தாக்கம் சு.யுவராஜனின் அல்ட்ரோமேன் தலைப்பைப் படித்ததுமே இது என்ன கார்ட்டூன் சம்பந்தப்பட்ட மிகைகற்பனை சிறுகதையோ எனத் தோன்ற வைக்கலாம். காலம் காலமாக அல்ட்ரோமேன், பாவர் ரேஞ்சர்ஸ் போன்ற மிகைகற்பனை கதாநாயகக் / சாகச நாயகக் கார்ட்டூன்கள் சமூகத்தின் மனத்தில் விதைத்துவிட்ட மனோபாவம் அது. அதுவும் அல்ட்ரோமேன் 1960களில் அனைத்து சமூகங்களிலும் மிகவும் கவனம்பெற்ற கார்ட்டூன் ஆகும். 1966ஆம் ஆண்டில் ஜப்பானியத் தொலைக்காட்சி தொடராக அல்ட்ரோமேன் தொடங்கப்பட்டது. கைஜு, கொட்சிலா போன்ற விநோதமான கொடூரமான ராட்சத மிருகங்களைக் கொன்று மக்களைக் காப்பாற்றும் வேலையைத்தான் அல்ட்ரோமேன் செய்யும். யுவராஜன் தன் கதைக்கு அல்ட்ரோமேன் என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்ததையொட்டி உடனே ஒரு ஜனரஞ்சகமான பொதுமனத்திற்கு இக்கதை தோட்டப்புற மக்களைக் காக்கும் தெய்வமாகத் திகழும் ஒரு ரோபின் ஹூட் கணக்கில் உள்ள யாரோ ஒருவரைப் பற்றியதாக இருக்கும் எனத் தோன்ற வாய்ப்புண்டு. என்னிடமும் சிலர் இதையே கேட்டிருக்கின்றனர். ஆனால், இக்கதையில் வரும் அல்ட்ரோமேன் வேறு. யுவராஜன் இக்கதையின் ஊடாக தோட்டப்புறங்களில் நிகழ்ந்த குடும்ப வன்முறையைப் பேசும்பொருளாக மாற்றுகிறார். இந்திய மனங்களில் ஊறிக்கிடக்கும் ஆணாதிக்கத்திற்கு எதிரான பார்வை அவருடைய கதையில் வியாபித்து வெளிப்படுகிறது. 1996ஆம் ஆண்டிற்குப் பிறகே பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சட்டம் தீவிரப்படுத்தப்பட்டது (Domestic Violence Act) என்றால் 1960களில் தோட்டப்புறங்களில் எந்தச் சட்டம் குறித்தும் பிரக்ஞை இல்லாமல் இருந்த இந்தியப் பெண்கள் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு எதிர்வினையாற்றாமல் அடங்கி உள்ளுக்குள் புழுங்கி தொய்ந்து சலித்துக் கிடந்தார்கள் என்கிற வேதனையையே யுவராஜன் அல்ட்ரோமேன் கதையில் முன் வைக்கிறார். கைஜூ, கொட்சிலா போன்ற மிருகங்கள் நம் சமூகத்தில் வன்முத்துடன் வீடுகளில் ஒளிந்திருந்த்தை அடையாளம் காட்டும் அவருடைய இக்கதையில் ஓர் அல்ட்ரோமேனையும் படைக்கிறார். ஒரு சிறுவனின் விசித்திரமான மனோபாவத்திலிருந்து அல்ட்ரோமேன் எழுந்து கொள்கிறது. இக்கதையை வாசிக்கும்போது அந்த அல்ட்ரோமேன் யாரென்று புலப்படும். நமக்கே தெரியாமல் நாம் செய்யும் கொடூரங்களுக்கு எதிராக ஒரு சிறுவன் நம் வீட்டில் திடீரென்று அல்ட்ரோமேனாக மாறி நம்மை எதிர்க்கக்கூடும். 2.   குடும்ப வன்முறையின் அரசியல் ஓர் ஆண் தன் அதிகாரத்தையும் ஆக்கிரமிப்பையும் முதலில் மனைவியிடமிருந்தே தொடங்குகிறான். இன்றைய குடும்ப உளவியலின் வழி ஆண்களிடமுள்ள அதிகார உணரு முதலில் மனைவியிடமே உக்கிரமாகப் பிரயோகிக்கப்பட்டு பிறகு சமூகத்திற்குள் நுழைவதாகச் சொல்லப்படுகிறது. குடும்ப அதிகாரம் என்பது உடலை வதைப்பது, கொடுமைப்படுத்துவது என்று மட்டுமல்ல. மனைவிக்கும் சேர்த்து முடிவெடுப்பது, அவளுக்குத் தேவையானவற்றை முன்னின்று நிறைவேற்றுவது, குடும்ப்ப் பிரச்சனைகளுக்கு சிக்கல்களுக்கு தன் ஆளுமையின் வழியே தீர்வுக்காண முடியும் என நம்புவது முதல் எல்லாமே அதிகாரத்தின் பல வடிவங்கள்தான். மனைவி முழுக்கவும் தன்னைச் சார்ந்தவள் என்கிற தீர்க்கமான புரிதலை ஓர் ஆண் முதலில் இந்த ஆணாதிக்க சமூகத்தின் சடங்குகளின் வழியாகவே பெறுகிறான். அது தார்மீகமான அதிகாரமாகவும் அல்லது கொடூரமான அதிகாரமாகவும் மாற்றம் கொள்வது அவரவர் சூழலையும் மன அமைப்பையும் பொருத்தவை. ஆனால், தன் மனைவியிடம் அதிகாரத்தை இழக்கும் ஒருவன் பெரும் தடுமாற்றம் கொள்வதற்குக் காரணம் தன் அதிகாரம் எங்கோ பலவீனம் அடைந்துவிட்டதாக அவன் கருதுகிறான். அதிகாரத்தின் வழி அவன் நிறைவேற்றி வந்த கடமைகள் ஒடுக்கப்படுவதன் மூலம் தன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை இழக்கின்றான். அவனது இருப்பு பெரும் கேள்விக்குள்ளாகுவதாக எண்ணுகிறான். ஆணிடம் இருக்கும் அதிகாரம் பெண்ணிடம் மாறுவதாக அச்சம் ஏற்படும் அடுத்த கணமே அமைதியிழந்து கொடூர மனத்துடன் இயங்குகிறான். யுவராஜன் கதையில் வரும் அப்பாவும் அப்படிப்பட்டவராக இருக்கின்றார். கதையில் அவரைப் பற்றிய சித்தரிப்புகள் அதிகம் இல்லையென்றாலும் ஆங்காங்கே காட்சி அடக்கத்துடன் அவர் படைப்பக்கப்படும் வித்த்திலிருந்து நம்மால் அவரின் மீதான கற்பிதங்களை வியாபித்துக் கொள்ள முடியும். அதிலிருந்து மீண்டு தனித்து இயங்குவதன் மூலம் ஆண் வழி சமூகத்தைச் சேர்ந்த ஒரு கணவன் தன் அதிகாரத்தின் நிலை குறித்து அச்சம் கொள்ளத் துவங்குகிறான். அதிலிருந்து தன்னை மீட்டெடுக்க வன்முறையைக் கையாள்கிறான். ஒரு குடும்ப வன்முறை இங்கிருந்து தொடங்குவதாக நினைக்கிறேன். யுவராஜன் தன் அல்ட்ரோமேன் கதையிலும் அத்தகையதொரு சூழலே அன்றைய இந்தியக் குடும்பங்களுக்குள் வெடித்துச் சிதறுவதாகக் காட்டுகிறார். உடல் ரீதியிலான அடக்குமுறை இக்கதையில் வரும் அம்மா தீம்பாருக்கு மரம் வெட்டப் போகிறார். அப்பா இரவெல்லாம் குடித்துவிட்டு வந்து அம்மாவை அடிக்கின்றார். வேலைக்குச் செல்லும் பெண்களின் நடத்தையைச் சந்தேகிப்பதே இந்திய சமூகத்தில் ஆணாதிக்கத்தின் முதல் செயல்பாடு. குடும்பத் தலைவர் மட்டுமே வேலைக்குச் செல்ல வேண்டும்; பெண்கள் வீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்கிற அரதபழமையான சிந்தனை ஆண் மனங்களில் படிந்து கிடப்பதால் ஏற்படும் விளைவு. அடுத்து, வேலைக்குச் செல்லும் பெண்களை உடல் ரீதியில் அடக்குவது. ஆண் தன் பலத்தைக் கொண்டு பெண் உடலைச் சிதைப்பதும் அன்றே குடும்பங்களில் ஓர் அடக்குமுறையாக இருந்திருக்கிறது. இதே பிரச்சனை 1980களில் இரவு வேலை(Night shift) வந்தபோது இதைவிட மேலாக வெடித்தது என்றே சொல்ல வேண்டும்.       மன நீதியிலான ஒடுக்குமுறை அடுத்து, மனரீதியிலான நெருக்குதலைக் கொடுப்பதும் ஆண் ஆதிக்க சமூகத்தின் இன்னொரு அடக்குமுறையாகவும் கருதப்பட்டது. யுவராஜனின் கதையில் வரும் அம்மாவிற்கு வீட்டில் பெரிதாக எந்த உரிமையும் இருப்பதில்லை. இரவு நேரங்களில் சமையலறையின் இருட்டில் அமர்ந்து கொண்டு கூரையை வெறித்துக் கொண்டிருப்பார் என அவர் சொல்லும் வரி மனத்தை இறுக்கமாக்குகிறது. இருட்டைத் தாண்டி அதற்குள் கொல்லப்பட்ட பல உணர்வுகளுடன் தகித்துக் கொண்டிருப்பதுதான் அடக்குமுறைக்கு ஆளான பல அம்மாக்களின் உலகமாக இருந்திருக்கிறது. வீட்டைத் தாண்டி வராத அவர்களின் கண்ணீர் குரல்களை யாருமே கேட்டதில்லைத்தான். ஆண் அதிகாரம் பெண்கள் தங்களின் மனத்தைத் தானே ஒடுக்குக் கொண்டு வாழ மட்டுமே விட்டிருப்பதும் நம் இந்தியக் குடும்பங்களில் நடந்த உண்மைகளாகும். ஒருமுறை எல்லோரும் நாம் பார்த்த, அல்லது நம் வீட்டில் வாழ்ந்த அம்மாக்களை, பெரியம்மாக்களைப் பின்நோக்கிப் பார்த்தால், அவர்கள் உடல் ரீதியில் கொடுமைக்குட்படுத்தபடவில்லையென்றாலும் கருத்துரிமை இல்லாமல் வாயொடுங்கிப் போனவர்கள் நம்மிடையே உலா வந்திருப்பார்கள். இதுவும் ஆணாதிக்கத்தின் முகம்தான் ஆனால் குடும்ப வழக்கமாக பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. இன்றளவும் அப்பாவை மீறி எந்த முடிவும் எடுக்க முடியாத பெண்கள் இருக்கவே செய்கிறார்கள். இத்தகைய குடும்ப சூழலில் வளரும் ஓர் ஆண் எப்படிப் பெண்களை அடக்கி ஆள வேண்டும் எனத் தன் அப்பாவிடமிருந்து கற்றுக் கொள்கிறான். அதுவே பெண்ணாக இருந்தால் எப்படி ஆண்களுக்கு அடங்கி நடந்து கொள்ள வேண்டும் எனத் தன் அம்மாவிடமிருந்து கற்றுக் கொள்கிறார். இத்தகைய கொடூரமான ஆணாதிக்கச் சிந்தனை பாரம்பரியமாகக் குடும்பங்களுக்குள்ளிருந்து விரிகிறது. அதன் நூலிழையில் ஒரு எதிர்ப்புணர்வைக் காட்டும் முயற்சியே யுவராஜனின் அல்ட்ரோமேன் ஆகும். எல்லாம் காலக்கட்டத்திற்கும் தேவையான ஒரு விழிப்புணர்வை விதைத்துச் செல்கிறது கதை. விரைவில் வெளிவரவிருக்கும் சு.யுவராஜனின் சிறுகதை தொகுப்பில் அல்ட்ரோமேன் சிறுகதையை வாசிக்கலாம். 

Make Money Online : http://ow.ly/KNICZ

சனி, 16 ஜூலை, 2016








                    பதிவுப் புத்தகத்தை எடுத்து நீட்டிய பர்மா நாட்டைச் சேர்ந்த பணிப்பெண்ணின் கண்கள் உறக்கமில்லாமல் கறுத்துப் போயிருந்தன. கண்மணி குமாரை நிமிர்ந்து பார்த்துவிட்டுப் பதிவு புத்தகத்தைத் திறந்தாள். ‘குமரேசன் – 21.11.2013 மாலா     - 21.11.2013 முருகன் & சுகுமாறி 17.09.2013 சியோங் லீங் – 09.08.2013…. என இங்கு வந்து தங்கியவர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டிருந்தன. கண்மணிக்குச் சட்டென சந்தேகம் தட்டியது. அந்தப் பர்மா பணிப்பெண்ணைக் கவனித்தாள். ஒரு பழைய தகறக் குவளையில் குட்டையான ஒரு பெண்சில், அதனுடன் கட்டி வைக்கப்பட்ட ஒரு நீலப் பேனா. சுவரில் இந்த மலையின் பழைய படம் தொங்கவிடப்பட்டிருந்தது. “குமார்…” “என்னம்மா?” “ஒரு வருசம் இங்க யாரும் வந்து தங்கலஇதைப் பாருங்ககுமார் அந்தப் பதிவு புத்தகத்தை வாங்கிக் கவனித்தான். கடைசியாக வந்து தங்கியவனின் பெயர் குமரேசன், அதுவும் ஒரு வருடம் ஆகிறது. குமார் அந்தப் பர்மா பெண்ணிடம் மலாய் மொழியில் விசாரித்தான். அவளும் தட்டுத்தடுமாறியே பேசினாள். “சரிமாவிடு. அவங்க ஆட்கள் மொத்தமா குழுவா வந்து தங்குவாங்க அதனாலே குறிப்புப் புத்தகத்துலே எழுதறது இல்லையாம்” “உண்மையாவா?” “இது ரொம்ப பிரசித்திப் பெற்ற மலைஎன்ன கவலை?” “மனசுக்குச் சரியா படலஅதான் ரொம்ப யோசிக்கறன்…” “ரொம்ப நாள் பிரிவுக்குப் பிறகு இப்பத்தான் சேர்ந்துருக்கோம் கண்மணி. இந்த்த் தனிமை வேறு எங்கயும் கிடைக்காது. மலையிலெ அடிக்கற குளிர், இதமான காற்று, ஆளே இல்லாத அமைதி. இதெல்லாம் எனக்கு வேணும் கண்மணிகண்மணி அதைக் கேட்டுத் தலையைச் சோர்வாகத் தொங்கவிட்டாள். குமார் பதிவுப் புத்தகத்தை வாங்கி பெயரெழுதிக் கையெழுத்திட்டான். பர்மா பணிப்பெண் எழுபது ரிங்கிட் எனக் கைகளிலேயே காட்டினாள். குமார் பணத்தைச் செலுத்திவிட்டுச் சாவியை வாங்கினான். சாவிக்குப் பக்கத்தில் மரத்தால் செய்யப்பட்ட முகம் சிதைந்த கரடி பொம்மை தொங்கிக் கொண்டிருந்தது. இருவரும் கைப்பையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்கள். குளிர்ச்சி மிகுந்த காற்று பேயோசையுடன் அவர்களை உரசி சென்றது. தூரத்தில் மலை வாய்ப்பிளந்து கிடந்தது. குரோசன் மலை, குரூண் நகரிலிருந்து காட்டுப் பாதையில் 40 நிமிடங்கள் பயணிக்க வேண்டும். நிலத்திலிருந்து 3000 அடி உயரத்தில் கம்பீரமாக நிலைத்திருந்தது. பெரும்பாலும் குரூண் நகரமே மாலை 6மணிக்கு மேல் அமைதியாகிவிடும். ஆதலால், இந்த மலைக்கு வர எந்தப் போக்குவரத்து வசதியும் இருக்காது. குமார் தனக்கு வழங்கப்பட்ட வீட்டைத் தேடினான். அங்கு எல்லாமே மர வீடுகள்தான். ஒவ்வொரு வீடும் 50 மீட்டர் இடைவேளியுடன் தனித்தனியாகக் கட்டப்பட்டிருக்கும். குமார் அறை எண் 7- திறந்தான். கும்மிருட்டு அறைக்குள் சுருண்டு படுத்திருந்தது. “ச்சீ! எவ்ள தூசி! சுத்தமே பண்ண மாட்டாங்களா?” கண்மணி சலித்துக் கொண்டே கையில் பிடித்திருந்த பையைக் கீழே வைத்தாள். “யாருமே தங்கலஅதான் இப்படி இருக்கு போலஎனச் சொல்லிக்கொண்டே விளக்கைப் போட்டான். வெளிச்சம் குறைவான மஞ்சள் விளக்குத் திணறிக்கொண்டே எரியத் துவங்கியது. சுவரில் ஒரு ராணியின் ஓவியம் இருந்தது. கண்களில் ஏக்கமிக்க அவளுடைய தோற்றம் அச்சுறுத்தியது. குமார் மெத்தையைத் தட்டி அதன் மேல் படர்ந்திருந்த தூசியைச் சுத்தம் செய்தான். கண்மணி அறைக்குள் இருந்த ஒரேயொரு கண்ணாடி சன்னலை மெல்ல திறந்தாள். கீழே பெரிய பள்ளத்தாக்கு தெரிந்தது. ஓலமிடும் காற்றின் ஓசை பாதாளத்திலிருந்து மேலெழுந்து வந்தது. மரக்கிளைகள் சன்னலை மிக நெருக்கமாக உரசிக் கொண்டிருந்தன. “இன்னிக்கு ஒரு ராத்திரி ரொம்ப பயங்கரமா இருக்கப் போவுதுஎனப் பயத்துடன் கண்கள் விரியக் கூறினாள். குமார் அவளை நிமிர்ந்து பார்த்தான். சற்று முன் சுவரில் இருந்த ராணி அவளுக்குப் பின்னே கண்ணாடி சன்னலின் ஓரம் நின்றிருந்தாள். -    தொடரும்-